Thursday, November 7, 2013

மகளைப் பெற்ற ஓர் அப்பாவின் கதை!


தமிழ் சினிமாவின் நல்ல படங்களை, முக்கியமாக 'யதார்த்த' படங்களைப் பார்ப்பதில் எப்போதும் எனக்கோர் பயம். நான் அவ்வளவு தைரியசாலியல்ல எனச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அதனால்தான் தங்க மீன்கள் டி வி டி வங்கி, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகப் பார்க்கவில்லை. பார்த்தபோதுதான் என் தவறு புரிந்தது. எதிர்பார்த்ததற்கு மாறான அனுபவம். படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி, கதை நிகழும் பிரதேசமும் படம் முழுதும் உணரவைக்கும் ஈரமும் ஏனோ ஓர் ஈரானியப் படத்தைப் பார்ப்பது போலவேயிருந்தது.

ஈரானியப் படங்களில் வருவது போலவே அனைவரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமாக கவர்கிறார்கள். கல்யாணி வேலை பார்க்கும் 'பெரிசு', எவிட்டா டீச்சரின் கணவன் உட்பட! அவரவருக்கு இயல்பான நியாயத்தோடு முரண்பட்டுக் கொள்கிறார்கள். கல்யாணி மட்டும் சிக்கலானவனாக, வகைப்படுத்திக் கொள்ள முடியாதவனாக இருக்கிறான். அந்தக் குளத்திலிருக்கும் தங்க மீன் பற்றிப் பேசும்போதே பகீரென்கிறது.ஆரம்பத்திலேயே எப்போது நடக்கப்போகிறதோ? எனத் திகிலாகிவிடுகிறது.

கல்யாணிக்கு என்ன பிரச்சினை? பொறுப்பில்லாத மனிதனா? ஒவ்வொரு ஊரிலும் பொறுப்பில்லாத, எதையும் உதாசீனத்தோடு அணுகும் மனிதர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையின் மீதும், யார்மீதும் ஈடுபாடில்லாமல் வாழ்வார்கள். அனால் கல்யாணி அப்படியல்ல. அவனுக்கும் குடும்பம் இருக்கிறது. மகள், மனைவி மீது உயிரை வைத்திருக்கிறான். மனைவியை, அப்பா, அம்மாவை மதிக்கிறான். அவனுக்குத் தன்மானம், ரோஷம் இருக்கிறது. கல்யாணி எதையும் புரிந்து கொள்ளாத முட்டாள் இல்லை. புரிந்துகொள்ள மறுக்கிறான். பொதுவில் நாம் காணும் விட்டேத்தியான மனிதர்கள் இப்படியிருப்பதில்லை.அவர்களில் பெரும்பான்மை குடிகாரர்களாக வேறு இருந்து தொலைப்பார்கள்.

மகளுக்கு உயர்ந்த கல்வியைக் கொடுக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறான்.ஆனாலும் அதற்காக நல்ல வேலையைத் தேடிக்கொள்வதில்லை. கல்யாணிக்கு வேறு வேலை கிடைக்காமலில்லை. மகளைக் கூட இருந்தே கவனிக்க வேண்டும் என விரும்பும் அவன் அதற்கு முயற்சிக்கவில்லை. இது ஆணின் இயல்புக்கு மாறானது.யாரும் விரும்புவதுமில்லை, குழந்தையைத் தவிர! வளர்ந்தபின் அவளே தந்தையின் பொறுப்பு பற்றிக் கேள்வி கேட்பாள் என்பது வேறு விஷயம் - ஆக, அதுவும் இயல்பானதுதான். கல்யாணியின் தந்தை கேட்கிறார்,  "அவளுக்கு எதுக்குடா ரெண்டு அம்மா?"

அப்பாக்களின் பிரதான கடமை குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வைத்திருப்பது என்பதால் மனைவி, பிள்ளைகள் மீதான சற்றே விட்டேத்தியான மனநிலை சமூகத்தால் கண்டுகொள்ளப்படுவதில்லை. அதுவே பொருளாதாரரீதியாக வெற்றிகரமான குடும்பத் தலைவனின் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது. பின்னாளில் தனிமைப்படுத்தப்பட்ட மனைவியின் பார்வையில் அவர் பொறுப்பில்லாதவராகவும் தோன்றலாம்.

"எப்பவும் எழுதறது, படிக்கறது, ஸ்டோரி டிஸ்கஷன் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார். மனைவி, குழந்தைங்க பத்தின சிந்தனை அவருக்குக் கிடையாது. சுருக்கமாச் சொல்லணும்னா பசங்க என்ன படிச்சாங்க, எப்படிப் படிச்சாங்கன்னு கூட அவருக்குத் தெரியாது. பசங்களாப் படிச்சாங்க…. அவங்களா வேலையைத் தேடிகிட்டாங்க… அவங்களா பிடிச்ச பெண்ணைத் திருமணம் செய்துகிட்டாங்க… மத்தபடி அப்பாவா அவர் எந்த ஸ்டெப்பும் எடுத்ததில்லை" - தலைவர் சுஜாதாவின் நிலைமை இது!

குடும்பத்தின் பொருளாதார நிலையிலோ, உறவுகளின்மீதோ எந்தவித அக்கறையுமில்லாத விட்டேத்தி அப்பாக்களும் நடைமுறையில் இருக்கிறார்கள்.'பாவம் குடிகாரர்' என்று நியாயப்படுத்திவிடவும்(?!) முடியாத சோகம் அவர்களுடையது!

கல்யாணியையே சரியாகப் புரியாத நிலையில் இதற்கெல்லாம் இலகுவாக கல்யாணியே தீர்வு சொல்லிவிடுவதுதான் நெருடுகிறது. இவ்வளவு பிரச்சினைக்கும் பணம் பிடுங்கும் தனியார் கல்விமுறைதான் காரணம் என்கிறான். அதுதான் கல்யாணியையும் குழந்தையையும் பிரித்தது. அதுதான் குழந்தையின் உயிரைப் பறித்துவிடக்கூடிய அசம்பாவிதத்தை நிகழ்த்தியிருந்தது. பணத்தைக் கோராத அரசு பள்ளியில் மகளைச் சேர்த்துவிட்டால் எல்லாப் பிரச்சினையும் சரியாகிவிடும் என்கிறான். ஆக, கல்யாணியின் பிரதான பிரச்சினை பள்ளிக் கட்டணம்.அது அவசியமில்லாதபோது கல்யாணி வேறு ஊருக்குப் போய் உழைக்கத் தேவையில்லை. ஏன் உழைக்கவே வேண்டியதில்லை - அவன் வரையில்! அப்படியானால் வீட்டில் தொலைக்காட்சியை அகற்றிவிட்டால் விளம்பரங்களைப் பார்த்து மகள் எதையாவது கேட்கும் ஆபத்துமில்லை? இதுதான் பிரச்சினையா? படத்தின் மையக்கருவா? இதுதவிர, எங்கோ ஓர் மூலையில் ஒளிந்திருக்கும் ஒன்றிரண்டு எவிட்டா டீச்சர்களுக்கும் நன்றி சொல்லப்படுகிறது.

ஒரு தனி மனிதனின் கதையாக, ஒரு கல்யாணியின் வாழ்வாக, அதுவரை நல்லதோர் அழகியலாக ரசிக்க முடிந்த படம், இறுதியாக வலிந்து கருத்து சொல்லும்போது தர்க்க ரீதியான கேள்விகளைக் கேட்கச் சொல்கிறது. உலகமயமாக்கல் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்து சமூகத்தை நோக்கி கைகாட்டுகிறான், சமூகத்தில் ஒரு தந்தையாக தனது பொறுப்புகளைச் சரிவரச் செய்யாத கல்யாணி. தனது பொறுப்பின்மைக்கும் சேர்த்து சமூகத்தைக் குற்றம் சொல்வது உறுத்துகிறது. இன்றைய ஒரு குழந்தைக்கு முக்கிய தேவை ஓர் கணணியா அதே பெறுமதியுடைய நாய்க்குட்டியா என்று கேட்டால் கல்யாணி மகள் விரும்பிய நாய்க்குட்டி எனச் சொல்வான். அவன் வரையில் அது நியாயம்! அதை வாங்கிக் கொடுத்துவிட்டு அதற்கும் சமூகம்தான் காரணம் எனக் கூற விழைந்தால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்? இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களுக்கும் இதுவே காரணம் என்றே நம்புகிறேன். கல்யாணி கல்யாணியாகவே இருந்திருக்கலாம். திடீரென இயக்குனர் ராம் ஆக மாறிவிடுவதுதான் பிரச்சினை. சமூகத்தை நோக்கிக் கருத்து சொல்வது சமயங்களில் அழகான ஓர் கதையை குழப்பிவிடுகிறது. 'கற்றது தமிழ் ' படத்திலும் இதே சிக்கல்!

"காசில்லாதவன் எல்லாம் முட்டாள் இல்லைடா", "காக்கா வந்து சொல்லிச்சா? "வசனங்களைக் கேட்கும்போது ராம் தெரிகிறார்.ஆற்றாமையால் அழும்போதும் அழுகையை அடக்கிக் கொண்டே திக்கித் திக்கிப் பேசும்போதும் அவ்வளவு இயல்பு! குடும்பத்தைப் பிரிந்து தொலை தேசத்தில் வேலைபார்க்கும் எல்லா அப்பாக்களுக்குள்ளும் ஒரு கல்யாணி இருக்கிறான். இது மகள்களைப் பெற்ற அப்பாக்களின் கதையல்ல. ஒரு கல்யாணியின் கதை!  பணத்தை பொருட்படுத்தாத உறவுகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் கல்யாணியின் உலகம் தனியானது. இந்த உலகம் கல்யாணிகளுக்கானதல்ல. இறுதியில் கருத்து சொல்வதைத் தவிர்த்து விட்டால், சில நெருடல்களையும் தாண்டி நல்லதோர் படைப்பு தங்க மீன்கள்.

இதுவே ஓர் இரானியப் படமாகவோ, இத்தாலியப் படமாகவோ இருந்தால் (நிச்சயம் 'கருத்து' சொல்லப்படாது) அந்த 'தங்கமீன் கதை', 'வோடஃபோன் 'நாய்க்குட்டியையும் பற்றிய எந்த உறுத்தலுமில்லாமல் கொண்டாடியிருப்பேனோ என்று எனது நேர்மையையும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. 

9 comments:

  1. தம்பி, இந்த ராமின் பிரச்சினையே இது தான்..கற்றது தமிழிலும் இதையே செய்தார். இப்போதும் அப்படியே.

    ReplyDelete
  2. ஒரு பிரச்சினையை தீவிரமாகச் சொல்வது, பின்னர் அதற்குச் சம்பந்தமில்லாத ஒரு எதிரியைக் காட்டி இவனால்தான் என்று முடிப்பது..அவருக்குள் இருக்கும் கருத்து கந்தசாமி சாகும்வரை, அவருக்கு விமோசனமில்லை!

    ReplyDelete
    Replies
    1. எனக்குப் பிடிச்ச இயக்குனர்களில் ஒருவர் ராம். ஒரே படத்தில ரெண்டு மூணு விஷயங்களை சொல்ல வராரோன்னு கூடத் தோன்றியிருக்கு - கற்றது தமிழ் பார்த்தபோது! தங்க மீன்கள் மிகப் பிடிச்சிருந்தது. குறிப்பா ஒளிப்பதிவு. பின்னணிஇசை. யுவன் நீண்ட நாளைக்குப் பிறகு மியூசிக் போட்டிருக்கார். குட்டிக் குட்டியா நிறைய விஷயமிருக்கு. ஆனாலும் ஏன்? ஏனிப்பிடி? புரியல!

      Delete
  3. சில அப்பாக்கள் கல்யாணி போல் இருக்கக் கூடும்!கல்வி முறையிலும் தவறு இருக்கக் கூடும்.ஆனாலும்,ராம் எதையோ நினைத்து எதையோ இடித்தது போல்.............

    ReplyDelete
  4. சொல்ல வந்ததை சரி வர சொல்லவில்லை என்பதால்தான் தங்கமீன்கள் தவறிவிட்டன...

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம். படம் அழகாக எடுக்ப்பட்டிருந்தாலும், அது சொல்ல வருகின்ற செய்தி அல்லது மையக் கரு தெளிவில்லாது இருக்கிறது.

    ReplyDelete
  6. மிக அழகாக அலசியிருக்கீங்க... நீங்கள் சொல்லியிருப்பவற்றுடன் வரிக்கு வரி ஒத்துப் போகிறேன்!

    ReplyDelete
  7. உலக சினிமாவின் விமர்சனம், Trailer, டவுன்லோட் லிங்க், rating இவை அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் கிடைக்கிறது.
    https://www.facebook.com/pages/Hollywood-Movies/174422536006819

    ReplyDelete
  8. வணக்கம், தங்களது தளம் "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி:

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html

    ReplyDelete